SBI வாடிக்கையாளர்களுக்கு பெரிய எச்சரிக்கை!

எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான மற்றும் மிக முக்கியமான எச்சரிக்கை! இன்று இருக்கும் டிஜிட்டல் உலகத்தில், நமது கடின உழைப்பில் சேர்த்த பணத்தை எப்படியெல்லாம் திருடலாம் என்று ஒரு கும்பல் மிகத் துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு காத்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, “உங்கள் எஸ்பிஐ நெட் பேங்கிங் ரிவார்டு பாயிண்ட்ஸ் 9,980 ரூபாய் இன்றுடன் முடிவடைகிறது. உடனே இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஒரு மெசேஜ் உங்கள் மொபைல் போனிற்கு வரலாம். இதைப் பார்த்த உடனே, “அட, பத்தாயிரம் ரூபாய் சும்மா கிடைக்கிறதே” என்று ஆசைப்பட்டு அந்த லிங்க்கை க்ளிக் செய்துவிடாதீர்கள். இது உங்களின் வங்கி கணக்கை காலி செய்ய விரிக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய வலை!

அந்த மெசேஜில் ஒரு ஏபிகே (APK) ஃபைலை டவுன்லோட் செய்யச் சொல்லுவார்கள். இந்த ஏபிகே ஃபைல் என்பது ஒரு சாதாரண ஆப் கிடையாது; அது உங்கள் போனுக்குள் நுழையும் ஒரு டிஜிட்டல் கிருமி போன்றது. ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வரும் காந்தி பாபு பாணியில் சொல்வதென்றால், “மனுஷனோட ஆசையைத் தூண்டிவிட்டு, அவனையே அவனோட அழிவுக்குக் கூட்டிட்டுப் போறதுதான்” இந்தத் திருட்டு கும்பலின் வேலை.

நீங்கள் அந்த ஃபைலை இன்ஸ்டால் செய்த அடுத்த கணமே, உங்கள் போனில் இருக்கும் ரகசிய பாஸ்வேர்டுகள், வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி (OTP) என அனைத்தையும் அந்த மோசடி கும்பல் திருடிவிடும். பிறகு உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் உங்கள் அனுமதி இல்லாமலேயே மாயமாகிவிடும்.

இந்த மோசடி மெசேஜ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மத்திய அரசின் தகவல் பிரிவான பிஐபி (PIB Fact Check) இதற்கு ஒரு அதிரடி விளக்கம் அளித்துள்ளது. “இந்த மெசேஜ் 100 சதவீதம் போலியானது! எஸ்பிஐ வங்கி ஒருபோதும் தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலமாக லிங்க்குகளையோ அல்லது ஏபிகே ஃபைல்களையோ அனுப்பாது” என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்

‘திருட்டுப் பயலே’ படத்தில் வருவது போல உங்களை யாரோ ஒரு நபர் ரகசியமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனுமதிப்பதா அல்லது உங்கள் பணத்தைப் பாதுகாப்பதா என்பது உங்கள் விழிப்புணர்வில்தான் இருக்கிறது.

உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நேரடியாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ‘யோனோ’ (YONO) போன்ற பாதுகாப்பான செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். தெரியாத எண்களில் இருந்து வரும் ஆசை காட்டும் லிங்க்குகளை ஒருபோதும் க்ளிக் செய்யாதீர்கள்.

இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், குறிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்கும் முதியவர்களுக்கும் உடனடியாகப் பகிருங்கள். ஒரு சிறு கவனக்குறைவு உங்கள் வாழ்நாள் சேமிப்பையே காலி செய்துவிடும் என்பதால், விழிப்புணர்வோடு இருப்பதே இப்போதைய ஒரே பாதுகாப்பு.

Related News

Latest News