வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் புதிய உத்தரவு!

சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு சாமானிய மனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால், கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைக் கொண்டு பத்திரப்பதிவு செய்யச் சென்றால், அங்கு ஒவ்வொரு மேசைக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை நீண்ட காலமாக நிலவி வந்தது.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பத்திரப்பதிவுத் துறையில் வேரூன்றி இருந்த இந்த லஞ்சப் கலாச்சாரத்தை மொத்தமாக ஒழிக்கத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் சங்கமே லஞ்சத்திற்கு எதிராகக் களமிறங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, அதிகாரிகளின் இடமாற்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நேர்மையான நடைமுறைதான். முன்பு ஒரு சார்பதிவாளர் தனக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் பெற வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய புதிய நடைமுறையில் சுமார் 132 சார்பதிவாளர்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு நேர்மையான முறையில் இடமாறுதல் கிடைத்துள்ளதால், இனி பொதுமக்களிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அலுவலர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போது நிலவும் சூழல் நடுத்தர மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

இனி பொதுமக்கள் தங்களின் பத்திரப்பதிவைச் சுமுகமாக முடிக்கச் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற பழைய எண்ணத்தை மக்கள் முதலில் கைவிட வேண்டும். ஆன்லைனில் டோக்கன் பெற்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குத் தாமதமில்லாமல் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றாலே போதுமானது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைப் பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்தினால், இடைத்தரகர்கள் அல்லது புரோக்கர்களின் தலையீடு இன்றிப் பணிகளை எளிதாக முடிக்க முடியும். தேவையற்ற அவசரத்தைத் தவிர்த்து, அதிகாரிகளுக்குப் போதிய கால அவகாசம் கொடுத்தால் ஊழலற்ற முறையில் பதிவுகளை முடிக்கலாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த புதிய நடைமுறையின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கப்போகும் நிதி லாபம் மிக அதிகம். குறிப்பாக, ஒரு புதிய வீடு அல்லது அபார்ட்மெண்ட் வாங்குபவர்கள் கிரையப் பத்திரம் பதிவு செய்யும்போது, லஞ்சம் தவிர்க்கப்பட்டால் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் வரை ஒரு பத்திரத்திற்கு மிச்சமாகும் என்று ரியல் எஸ்டேட் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய தொகையாகும். அரசின் இந்த நல்முயற்சியும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தொடர்ந்து நீடித்தால், பத்திரப்பதிவுத் துறை என்பது ஊழலற்ற துறையாக விரைவில் மாறும். லஞ்சமில்லா தமிழகத்தைப் படைக்கத் தமிழக அரசு எடுத்துள்ள இந்த விஸ்வரூப முயற்சிக்கு மக்களிடையே தற்போது பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Related News

Latest News