அழிந்து வரும் ‘ரஷ்யா இராணுவம்’? பொளந்துகட்டும் உக்ரைன்! புதினுக்கு ‘பெரிய’ சோதனை !

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர், மனித வரலாற்றில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சுமார் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் இந்தப் போரில், உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக ‘சர்வதேச பாதுகாப்பு மற்றும் வியூக ஆய்வு மையம்’ (CSIS) வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை தெரிவிக்கிறது.

இதில் குறிப்பாக ரஷ்யா மட்டும் சுமார் 14 லட்சம் வீரர்களைப் பலி கொடுத்திருக்கிறது. இவர்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் போர்க்களத்திலேயே உயிரிழந்த நிலையில், எஞ்சியோர் படுகாயமடைந்து செயலிழந்து போயுள்ளனர். இது ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அளவிற்கான ஒரு மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கையின்படி, சமீபகாலமாக ரஷ்யாவிற்கு ஏற்பட்டு வரும் மனிதவள இழப்பு என்பது அவர்களின் புதிய ஆள்சேர்ப்பை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வீரர்களை ரஷ்யா இழந்து வரும் நிலையில், வெறும் 27 ஆயிரம் பேரை மட்டுமே அவர்களால் ராணுவத்தில் புதிதாகச் சேர்க்க முடிகிறது.

இந்த இடைவெளியை நிரப்ப அதிபர் விளாடிமிர் புதின் பல அதிரடி மற்றும் சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வருகிறார். சிறைக்கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் வங்கிக் கடனில் தவிக்கும் எளிய மக்களைப் போர்க்களத்திற்கு அனுப்பிப் போரைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் புதினின் இந்த உத்தி, தற்போது ஒரு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

உக்ரைன் ராணுவம் தற்போது தனது தாக்குதல்களை ரஷ்யாவின் எல்லைகளுக்குள் புகுந்து தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, அதிநவீன ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் முக்கிய ராணுவ மையங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகளை உக்ரைன் தகர்த்து வருகிறது. இதனால் போர்க்களத்தில் ரஷ்ய வீரர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது.

முன்னணிக் களங்களில் சண்டையிடச் செல்லும் ஒரு சராசரி ரஷ்ய வீரரின் ஆயுட்காலம் வெறும் 20 முதல் 35 நிமிடங்கள் மட்டுமே என்ற அதிர்ச்சிகரமான தகவல் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது நவீன காலப் போர்களில் இதுவரை இல்லாத ஒரு கோரமான சூழலாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இந்தத் துயரத்தின் விலை சாமானிய ரஷ்ய மக்களையே போய்ச் சேருகிறது.

இருப்பினும், மக்கள் தொகை அடிப்படையில் உக்ரைனை விடவும் ரஷ்யா மூன்று மடங்கு பெரிய நாடாக இருப்பதால், வீரர்களின் எண்ணிக்கையில் அவர்கள் இப்போதும் முன்னிலையில் உள்ளனர். சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு எதிராக, 4 லட்சம் ரஷ்ய வீரர்கள் களத்தில் நிற்கின்றனர். ஆனால், வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் போரில் வெற்றி பெற முடியாது என்பதை உக்ரைனின் புதிய முன்னேற்றங்கள் உணர்த்துகின்றன.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, இந்த ஆண்டின் இறுதியில் புதின் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ராணுவத் திரட்டலை அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியுள்ள இந்தப் போர், இன்னும் எத்தனை மனித உயிர்களைக் காவு வாங்கப் போகிறது என்பதுதான் இப்போது உலக நாடுகளின் மிகப்பெரிய கவலையாக உள்ளது

Related News

Latest News