சூரியனில் இருந்து வரும் ஆபத்து! விண்வெளி வானிலையில் அதிரடி மாற்றம்?

விண்வெளியின் மர்மங்களை ஆராய்வதில் இந்திய விஞ்ஞானிகள் இப்போது ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளனர். பெங்களூருவில் உள்ள இந்திய வான் இயற்பியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சூரியனில் இருந்து வெளியேறும் மாபெரும் வெடிப்புகள் மற்றும் சூரியப் புயல்கள் குறித்த 30 ஆண்டுகால ரகசியத்தை இப்போது உடைத்துள்ளனர்.

‘இன்டர்பிளானட்டரி கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ்’ (interplanetary coronal mass ejection) எனப்படும் இந்தச் சூரிய வெடிப்புகள், சூரியனில் இருந்து பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை அதிவேகமாகப் பூமிக்குக் கடத்தி வருகின்றன. பொதுவாக, இந்தச் சூரியப் புயல்கள் சூரியனில் இருந்து வெளியேறி நீண்ட தூரம் பயணிக்கும் போது குளிர்வடையும் என்றே இதுவரை உலக விஞ்ஞானிகளால் நம்பப்பட்டு வந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக இந்திய விஞ்ஞானிகள் ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

1995 முதல் 2024 வரையிலான சுமார் 29 ஆண்டுகாலத் தரவுகளை ஆய்வு செய்ததில், பூமிக்கு அருகே வரும் சூரியப் புயல்களில் சுமார் 45 சதவீதம் குளிர்வடைவதற்குப் பதிலாக, அதிக வெப்பமடைகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகச் சூரியனின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் காலங்களில் இத்தகைய வெப்ப மாற்றங்கள் அதிகம் நிகழ்வதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முந்தைய சூரிய சுழற்சிகளான 23 மற்றும் 24-ல் பெறப்பட்டத் தகவல்களை ஒப்பிடும்போது, ஒவ்வொரு சுழற்சிக்கும் இடையில் இந்தச் சூரியப் புயல்களின் வெப்பத் தன்மையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆய்வில் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு வெறும் விண்வெளி ஆய்வோடு மட்டும் நின்றுவிடாமல், பூமியில் வாழும் நமது அன்றாட வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில், இத்தகைய வெப்பம் மிகுந்த சூரியப் புயல்கள் பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும் போது, நமது தகவல் தொடர்பு சாதனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக மொபைல் போன் சிக்னல்கள், ஜிபிஎஸ் வசதிகள், செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு எனப்படும் ‘பவர் கிரிட்’களில் மிகப்பெரிய பாதிப்புகளை இது உருவாக்கக்கூடும். விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கும் இது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

பெங்களூரு இந்திய வான் இயற்பியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளான சௌம்யரஞ்சன் குந்தியா மற்றும் வாகீஷ் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான இந்தக் குழுவின் ஆய்வு முடிவுகள், லண்டனில் உள்ள ராயல் அஸ்ட்ரோனமிக்கல் சொசைட்டியின் சர்வதேச இதழில் அதிகாரப்பூர்வமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்வெளி வானிலையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் கோர முகத்தைப் பற்றியும், அது பூமியை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது பற்றியும் இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், உலக நாடுகளின் விண்வெளி நிறுவனங்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News