பார்க்க நல்ல ‘ஃபிட்’டாகவும், ஒல்லியாகவும் இருப்பவர்களுக்கு எவ்வித உடல்நலப் பிரச்சனையும் வராது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்திய ஆண்களின் ஆரோக்கியம் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை, ஒட்டுமொத்த தேசத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வெளியில் ஆரோக்கியமான பிம்பத்தைக் கொண்டிருக்கும் பல இந்திய ஆண்கள், தங்களுக்குள்ளே ஒரு மிகப்பெரிய ‘மெட்டபாலிக்’ நெருக்கடியைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. பார்க்க ஒல்லியாகத் தெரிந்தாலும், 30 மற்றும் 40 வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்திய ஆண்கள் அதிக அளவில் உள்ளாகிறார்கள்.
இதற்கு மிக முக்கியமான காரணமாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுவது ‘விசரல் ஃபேட்’ (Visceral Fat) எனப்படும் உட்புறக் கொழுப்புதான். பொதுவாக உடல் பருமன் என்பது வெளியிலுள்ள தோற்றத்தை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இந்த ‘விசரல் ஃபேட்’ என்பது நமது கல்லீரல், இதயம் போன்ற உள் உறுப்புகளைச் சுற்றி ரகசியமாகப் படியும் ஒரு ஆபத்தான கொழுப்பு. ஒரு நபர் சரியான எடையில் (Normal BMI) இருந்தாலும், அவரது உடலுக்குள் இந்தக் கொழுப்புப் படிந்து இன்சுலின் எதிர்ப்புத் திறன் மற்றும் இதய நோய்களைச் சத்தமில்லாமல் உருவாக்குகிறது.
சமீபத்திய தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, இந்திய ஆண்களிடையே உடல் பருமன் 22 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகவும், சர்க்கரை நோயின் பாதிப்பு 15 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த உடல்நலச் சிக்கல்களுக்குப் பின்னால் நமது மரபணுக்களும் (Genetics) ஒரு மிகப்பெரிய சதி செய்கின்றன.
மற்ற நாட்டு ஆண்களை விட இந்திய ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் மரபணுக்கள், கொழுப்பைச் சேமித்து வைப்பதிலும் இதய நோய்களை உருவாக்குவதிலும் அதிகத் தாக்கத்தைக் கொண்டுள்ளன. உங்களது அப்பாவுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ 40 அல்லது 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் பார்க்க எவ்வளவு ஃபிட்டாக இருந்தாலும், உங்களுக்கு அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
இதைக் கண்டறிய தற்போது ‘பாலிஜெனிக் ரிஸ்க் ஸ்கோர்’ (PRS) போன்ற நவீன மரபணு பரிசோதனைகள் வந்துவிட்டன. இவை உங்களுக்குப் பாதிப்பு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை மணி அடிக்கும் திறன் கொண்டவை. எனவே, நோயின் அறிகுறிகள் வரும் வரை காத்திருப்பது என்பது ஒரு தற்கொலை முயற்சிக்குச் சமம் என்கிறார்கள் நிபுணர்கள். முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு மற்றும் சீரான தூக்கம் ஆகியவை அவசியம்தான்; ஆனால் அதையும் தாண்டித் தகுந்த இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம்.
குறிப்பாகக் குடும்பப் பின்னணியில் நோய் பாதிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மதுப் பழக்கத்தைத் தவிர்ப்பதுடன், உங்களது இடுப்பு சுற்றளவைச் சரியாகப் பராமரிப்பதும் உங்களை இந்த ‘சைலண்ட்’ எமனிடமிருந்து காப்பாற்றும். ஆரோக்கியம் என்பது கண்ணுக்குத் தெரிவது மட்டுமல்ல, அது நமக்குள் இருக்கும் உறுப்புகளின் நிலையைப் பொறுத்தது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
