37 ஆண்டுகால அதிகாரம்.. பிரதமர் மோடி செய்த காரியம்…! ஈரானை கைவிடுகிறதா இந்தியா?

உலக அரசியலில் இந்தியா எடுத்துள்ள ஒரு மிக முக்கியமான ராஜதந்திர நகர்வு, இப்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவராக சுமார் 37 ஆண்டுகாலம் பதவி வகித்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்கு வரும் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க நேரடியாக அழைப்பு விடுத்தார். ஆனால், இந்த அழைப்பைத் தவிர்த்துவிட்டு, பிரதமர் மோடி தனக்குப் பதிலாக மிகக் குறைந்த அந்தஸ்து கொண்ட பிரதிநிதிகளை அனுப்ப முடிவெடுத்திருப்பது இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா ஈரானை மெல்ல மெல்லக் கைவிடுகிறதா அல்லது இதற்குப் பின்னணியில் ஏதேனும் ரகசியத் திட்டங்கள் உள்ளனவா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களின் மறைவின் போது இந்தியா எப்போதுமே உயர்மட்டப் பிரதிநிதிகளையே அனுப்பி வந்துள்ளது. 1989-ல் முதல் உச்சகட்டத் தலைவர் கோமேனி மறைந்தபோது அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவும், 2024-ல் அதிபர் இப்ராகிம் ரைசி மறைந்தபோது இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால், இப்போது கமேனி மறைவிற்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் மற்றும் பீகார் ஆளுநரை இந்தியா அனுப்புவது, ராஜதந்திர ரீதியாக ஈரானுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இதற்குப் பின்னணியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான இந்தியாவின் மிக நெருக்கமான உறவு இருப்பதாகப் பன்னாட்டு அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்துதான் முன்னெடுத்தன. அத்தகைய சூழலில், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு தலைவருக்குத் தார்மீக அடிப்படையில் இந்தியா பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்தால், அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் எனத் டெல்லி மேலிடம் கருதுகிறது. இருப்பினும், இந்த முடிவு இந்தியாவிற்குச் சில சவால்களையும் கொண்டு வர வாய்ப்புள்ளது.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமானது. மேலும், பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்ல இந்தியா உருவாக்கிய சாபர் துறைமுகத் திட்டத்திற்கும் ஈரானின் ஆதரவு மிக அவசியம்.

பாகிஸ்தான் தனது பிரதமரையே இந்த இறுதிச் சடங்கிற்கு அனுப்பவுள்ள நிலையில், இந்தியா தனது பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது ஈரானைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடும். இந்தியாவின் இந்தச் செயல், ஈரான் போரில் அந்த நாட்டுக்கு ஆதரவாக இந்தியா இல்லை என்பதையும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டையே இந்தியா ஆதரிக்கிறது என்பதையும் மறைமுகமாகப் பறைசாற்றுகிறது.

ஒருபுறம் கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தகத் தேவைகள் இருந்தாலும், மறுபுறம் உலக வல்லரசுகளின் நட்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. பிரதமர் மோடியின் இந்த ராஜதந்திர நகர்வு இந்தியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் லாபத்தைத் தருமா அல்லது வளைகுடா நாடுகளில் இந்தியாவின் பிடியைத் தளர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News