இன்றைய சூழலில் பல பேர், ரிலாக்ஸ் செய்வதற்காக ரீல்ஸ் செய்யும் இடமாக கழிவறையைத்தான் கருதுகின்றனர். அங்கு அமர்ந்து கொண்டு மொபைலை பார்க்கும் ஆர்வத்தில், ஒரு சிலர், அரை மணி நேரம் வரை கூட அமர்ந்திருக்கின்றனர். இது, அன்றைய நாளில் கடந்து போகும் விஷயமாக மாறினாலும் நாளடைவில் இது பெரிய பிரச்சனையை உருவாக்கலாம். இது குறித்து பேசும் மருத்துவர்கள், இவை ஏற்படுத்தும் பாதிப்பையும் புட்டு புட்டு வைக்கின்றனர்.
ஒருவர், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து ஏற்படுத்தும் அழுத்தத்தால், ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு, மூல நோய் உருவாகிறது.குடலை தாங்குவதிலும், சிறுநீர்ப்பையை தாங்குவதிலும் பெல்விக் தசைகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கையில் தசைகள் பலவீனம் ஆகும். இதனால், மலம் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதோடு, இடுப்பு பகுதியில் பலவீனத்தையும் உண்டாக்கும்.
கழிவறையில் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது, உடலுக்கு கீழான ரத்த ஓட்டம் என்பது குறைந்து விடும். இதனால்தான், இடுப்பு மற்றும் தொடை பகுதிகளுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு, கால்கள் மரத்துப்போகும்.பெரும்பாலானோர் கழிவறையில் அதிக நேரம் செலவிடுவதற்கு மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணம், சாப்பிடும் உணவில் குறைந்த அளவு நார்ச்சத்து இருப்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடலுக்கு பயிற்சி கொடுக்காமல் இருப்பது உள்ளிட்டவையால் மலச்சிக்கல் ஏற்படும்.
ஒருவர், கழிப்பறையில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு இயல்பாக மலம் கழிக்க வரவில்லை என்றால், தொடர்ந்து கழிவரையில் அமர்ந்திருக்க கூடாது.கழிவறைக்கு செல்கையில், கையில் மொபைல் கொண்டு போவதை தவிர்க்க வேண்டும். இதனால் ஏற்படும் கவனச்சிதறல்தான் நேரம் போவதே தெரியாமல் செய்கிறது.
