சென்னை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! 15 நாள் தான் டைம்! உடனே இதை பண்ணுங்க!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை ஓரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து, சென்னை மாநகராட்சி இப்போது ஒரு மிக முக்கியமான மற்றும் இறுதிக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், உரிய காலக்கெடுவிற்குள் அந்த வாகனங்களை அவற்றின் உரிமையாளர்கள் மீட்கத் தவறினால், அவை அனைத்தும் ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை திருவல்லிக்கேணி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி-1, டி-2, எஃப்-1, எஃப்-4 உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய எல்லைகள் மற்றும் சென்னை தரமணி ஜே-13 காவல் நிலைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 717 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த 717 வாகனங்களும் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு, அந்தந்த காவல் நிலைய வளாகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலைப் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaicorporation.gov.in என்ற தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் வாகனம் இந்தத் தூக்கப்படும் பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் வாகனம் அங்கு இருந்தால், இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுகி, உங்கள் வாகனத்தை மீட்டுக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

15 நாட்கள் காலக்கெடு முடிந்த பிறகு, உரிமை கோரப்படாத அனைத்து வாகனங்களும் முறைப்படி மின்னணு ஏலம் (E-Auction) மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருமுறை ஏலத்திற்குச் சென்றுவிட்டால், அதன் பிறகு வாகனத்தை மீட்பது சட்டப்படி சாத்தியமற்றது என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சென்னையின் சாலைகளைத் தூய்மையாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் பராமரிக்க எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

Latest News