தமிழக அரசியல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சமீபத்திய நேர்காணலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக, திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே உருவான ஆட்சியெதிர்ப்பு மனநிலையே இருந்ததாக அவர் தெரிவித்தார்.
விஜய் தேர்தலில் நல்ல முன்னேற்றம் காண்பார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் மற்றும் வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெறுவார் என நினைக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறினார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கிடைத்த ஆதரவு தேர்தல் முடிவை தீர்மானித்த முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
விஜய் அரசியலிலும், நிர்வாகத்திலும் புதியவர் என்பதால், அவருக்கு குறைந்தது ஒரு ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது அவசியம் என்றாலும் அது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதியவர்கள் அரசியலுக்கு வருவதை தான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, பண பலம் மற்றும் சாதி அரசியல் போன்ற பழைய அரசியல் கட்டமைப்புகளை உடைக்க மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர்கள் தேவைப்படுவார்கள் என்றும், அந்த வகையில் விஜய்யும் தமிழக வெற்றி கழகமும் அரசியலில் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
தமிழகத்திற்கு நல்ல நிர்வாகம், ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் தலைமை மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அரசியல் கலாச்சாரம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு அவருடன் இணைந்திருப்பது ஜனநாயக கலாச்சாரத்திற்கு நல்லதல்ல என்றும், இதுபோன்ற கட்சி தாவல்கள் தேவையற்ற இடைத்தேர்தல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் விமர்சித்தார்.
தான் முன்னெடுத்து வரும் அரசியல் இயக்கத்தில் தற்போது சுமார் 19 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டிய பிறகே அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தனது இயக்கத்தின் அரசியல் அணுகுமுறை தமிழக வெற்றி கழகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும், அரசியல் தரத்தை தாழ்த்தும் எந்த நடவடிக்கையையும் ஏற்கமாட்டோம் என்றார்.
இளைஞர்கள், பெண்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் அதிகளவில் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டணி அரசியல் குறித்து பேசிய அவர், தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது வெறும் எண்கள் அல்ல, மக்களிடையே உருவாகும் அரசியல் நம்பிக்கையும் ரசாயனமும்தான் என்றும் தெரிவித்தார்.
