அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், உலக சாம்பியனான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்திருப்பது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து மண்ணில் இந்திய அணி சந்தித்துள்ள இந்த முதல் வரலாற்றுத் தோல்வியைக் காட்டிலும், ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு தொப்பியை வென்ற 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் Playing 11-இல் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதுதான் இப்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அவரது குழுவினரின் ‘இரட்டை வேடத்தை’ முன்னாள் வீரர் முகமது கைஃப் பகிரங்கமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் 776 ரன்களைக் குவித்து, 237 என்ற மலைக்க வைக்கும் ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டிய ஒரு வீரரை, பெஞ்சில் உட்கார வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும், உலகக்கோப்பை வென்ற தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், களத்தில் இந்த இருவரும் சொதப்பிய நிலையிலும், வைபவ்-வை உள்ளே கொண்டு வராதது ஏன் என முகமது கைஃப் காரசாரமாகக் கேட்டுள்ளார். “உலகக்கோப்பை வென்ற அணி என்பதால் அதே வீரர்களுடன் செல்கிறோம்” என்று அணி நிர்வாகம் கூறும் காரணத்தில் இருக்கும் முரண்பாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அணி நிர்வாகத்தின் இந்த ‘லாஜிக்’ ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மாதிரி மாறுவது ஏன் என்பதுதான் கைஃப்பின் பிரதான கேள்வியாக உள்ளது.
குறிப்பாக, சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட போது, “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் கேப்டனைத் தேடுகிறோம்” என்று கூறிய இதே நிர்வாகம், இப்போது 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற எதிர்கால நட்சத்திரத்தை மட்டும் ஏன் ‘புரோசஸ்’ என்ற பெயரில் முடக்கி வைக்கிறது என கைஃப் சாடியுள்ளார்.
அதேபோல், டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு சூர்யகுமார் யாதவின் கேப்டன் பதவியைப் பறித்து அவரை அணியிலிருந்தே நீக்கியபோது எங்கே போனது இந்த ‘உலகக்கோப்பை வென்ற டீம்’ என்ற லாஜிக்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரோஹித் மற்றும் சூர்யகுமார் விஷயத்தில் எதிர்காலத்தைப் பார்த்த நிர்வாகம், வைபவ் விஷயத்தில் மட்டும் பழைய வீரர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது அப்பட்டமான போலித்தனம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஜாம்பவான்களும் இந்தத் தோல்வி குறித்துத் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். அயர்லாந்து போன்ற ஒரு அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது இந்திய கிரிக்கெட்டிற்குப் பெரும் தலைகுனிவு என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்யாமல், நிர்வாகம் தனது விருப்பத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றிக்கொள்வது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த தொடரிலாவது வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது கம்பீர் தலைமையிலான நிர்வாகம் தனது பிடிவாதத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
