தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசுப் போக்குவரத்துத் துறையில், இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்த முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. கோட்டையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களின் பயண அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஜிபிஎஸ் கருவி மூலம் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம், ஒரு பேருந்து எப்போது வரும், எங்கே நிற்குது என்ற துல்லியமான தகவல்களைப் பயணிகள் தங்களது கைபேசி வாயிலாகவே நிகழ்நேரத்தில் தெரிந்து கொள்ள முடியும். இதைக் கண்காணிக்கச் சென்னையில் ஒரு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையமும், முக்கியப் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தின் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக, இனிவரும் காலங்களில் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையால் கொள்முதல் செய்யப்படும் அனைத்துப் புதிய பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவே இருக்க வேண்டும் என முதல்வர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், சொகுசுப் பயணம் என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமின்றி, சாமானிய மக்களுக்கும் குறைந்த செலவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக, பெட்ரோல் மற்றும் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாகப் பெருமளவில் மின்சாரப் பேருந்துகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும்போது நடத்துனர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே பெரும் தலைவலியாக இருக்கும் சில்லறைத் தட்டுப்பாடு மற்றும் பணப் பரிவர்த்தனை சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘பயணிகள் ஸ்மார்ட் கார்டு’ முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார்டுகளைப் பயன்படுத்திப் பயணிகள் மிக எளிதாகத் தங்களின் பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், நகரப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பேருந்துகள் விரைவாகச் செல்வதற்காக, பேருந்துகளுக்கு என்று பிரத்யேக வழித்தடங்களை உருவாக்கும் பிரம்மாண்டமான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது, மற்ற வாகனங்களின் நெரிசலைத் தவிர்த்துப் பேருந்துகள் குறித்த நேரத்திற்குத் தங்களது இலக்கைச் சென்றடையும்.
தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்குச் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் அரசுப் பேருந்து சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில், இதில் 64 சதவீத பயணிகள் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தின் மூலம் பலன் பெற்று வருகின்றனர். இந்தச் சேவைகளை இன்னும் பலப்படுத்தவும், கிராமப்புறங்களுக்குப் பேருந்து வசதிகளை 100 சதவீதம் உறுதி செய்யவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
அடுத்த ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் போக்குவரத்துத் துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, இந்தியாவிற்கே முன்மாதிரியான ஒரு போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க முதல்வர் விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த ஹைடெக் மாற்றங்கள் தமிழக மக்களின் அன்றாடப் பயணத்தை இன்னும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்பதில் ஐயமில்லை.
