நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பு காரணமாக சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்து 17 நாட்கள் ஆன நிலையில், தற்போது அவரையும் தொடர்ந்து பாக்யராஜும் மறைந்திருப்பது தமிழ் சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஜெயராமின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், திரைப்பட உலகின் பின்னணியில் உருவான ஒரு சுவாரஸ்யமான மனித உறவுக் கதையாக பார்க்கப்படுகின்றன. தொழில்முறை சூழலில் தொடங்கிய இவர்களின் தொடர்பு, காலப்போக்கில் ஆழமான புரிதலாக மாறி, இறுதியில் குடும்ப உறவாக உருவெடுத்த இந்த அழகான பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பூர்ணிமா ஜெயராம் முதன்முதலில் பாக்யராஜை சந்தித்தது ஒரு திரைப்பட வாய்ப்பு தொடர்பான சந்திப்பில் ஆகும்.அப்போது அவர் உற்சாகமாக ஆங்கிலத்தில் உரையாடிய நிலையில், பாக்யராஜ் “ஓகே… சீ யூ” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பூர்ணிமாவுக்கு ஆரம்பத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தியது.அவர் பாக்யராஜை திமிரானவர் என்ற எண்ணத்தில் பார்த்திருந்தாலும்,அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார்.
சில மாதங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் தனது டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்திற்காக புதிய கதாநாயகியைத் தேடியபோது, பூர்ணிமாவின் முகம் அவருக்கு நினைவிற்கு வந்தது. அதன் பின்னர் அவரை அழைத்து கதையை சொன்னபோது, முதல் சந்திப்பில் ஏற்பட்ட தவறான புரிதல் தெளிவுபடுத்தப்பட்டது. அந்த நிகழ்வைப் பற்றி பூர்ணிமா கேள்வி எழுப்பினார். அதற்கு பாக்யராஜ், “நீங்கள் பேசிய ஆங்கிலம் எனக்கு சரியாக புரியவில்லை. அதனால்தான் அந்த சூழ்நிலையை சமாளிக்க அப்படிச் சொன்னேன்” என்று வெளிப்படையாக கூறினார். ஆங்கில உரையாடல் முழுமையாக புரியாததால் அப்படிப் பதிலளித்ததாக அவர் விளக்கியது, இருவருக்கிடையிலான மனஅடைப்பை குறைத்ததாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு காலத்தில் இவர்களின் உறவு முழுமையாக தொழில்முறை அடிப்படையிலேயே இருந்தது. அப்போது பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா உயிருடன் இருந்ததால், தனிப்பட்ட உறவு குறித்த எந்த எண்ணமும் உருவாகவில்லை என குறிப்பிடப்படுகிறது. அந்த காலகட்டத்தில் பூர்ணிமா, பாக்யராஜின் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்; குறிப்பாக பிரவீனாவுடன் நல்ல நட்பு வளர்ந்தது. அதுமட்டுமல்லாமல் , பாக்யராஜ்–பிரவீனாவின் திருமண நாள் மற்றும் பூர்ணிமாவின் பிறந்த நாள் ஒரே தேதியில் அமைந்திருந்தது அவர்களை ஆச்சரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர்,செப்டம்பர் 5,1983 ஆம் ஆண்டு பிரவீனா மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார்.அவரது மறைவு பாக்யராஜின் வாழ்க்கையில் மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பாக அமைந்தது.சில காலம் தனிமையில் இருந்த அவர், குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்குப் பிறகே மறுமணம் குறித்து சிந்திக்கத் தொடங்கினார். அந்த சூழலில், மும்பையில் நடந்த ஒரு சந்திப்பில் பூர்ணிமாவை மீண்டும் சந்தித்தபோது, அவரே வாழ்க்கைத் துணையாக பொருத்தமானவர் என்ற எண்ணம் உருவானதாக கூறப்படுகிறது.
பூர்ணிமாவிடம் காதலை தெரிவிக்க முயன்றபோது, பூர்ணிமாவிற்கு அடுத்த நாளே படப்பிடிப்பிற்காக பாரீஸ் செல்ல வேண்டியிருந்தது.அதனால் அங்கிருந்து தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.பாரீஸிலிருந்து பூர்ணிமா பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது உதவியாளர் அந்த அழைப்புகளை ரசிகையின் அழைப்பு என நினைத்து பாக்யராஜிடம் இணைக்கவில்லை. பின்னர் உண்மை தெரிந்ததும், பாக்யராஜ் அடுத்த அழைப்புக்காக காத்திருந்தார். இறுதியில் இருவரும் உரையாடியபோது, பாக்யராஜ் தனது காதலை வெளிப்படுத்தினார். பூர்ணிமா தனது குடும்பத்தின் சம்மதத்துடன் முன்னேற வேண்டும் என்று கூறியதையடுத்து, இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் எம்.ஜி.ஆர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
பின்னாளில் பூர்ணிமாவும் மனதளவில் பாக்யராஜை நேசித்திருந்தது தெரியவந்தது. அதனால்தான் வெளிநாட்டிலிருந்தும் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. காதல் நிறைவேறினால் பாரீஸிலேயே ஹனிமூன் செல்ல வேண்டும் என்ற ஆசையையும் அவர் மனதில் வைத்திருந்தார்.ஆனால் திருமணத்திற்குப் பிறகு, பாக்யராஜின் பணிப்பளு மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அந்த ஆசை உடனடியாக நிறைவேறவில்லை. பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகே, வெளிநாட்டில் ஹனிமூன் செல்லும் ஆசை உள்ளிட்ட சில தனிப்பட்ட விருப்பங்கள் காலப்போக்கில் நிறைவேறின.
இவ்வாறு பார்க்கும்போது, காலம் மெதுவாக அவர்களின் வாழ்க்கையில் எழுதத் தொடங்கிய ஒரு காதல் கதை இது. புரிதல், தூரம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து, இறுதியில் அன்பும் நம்பிக்கையும் ஒன்றாக இணைந்தது.வாழ்க்கையின் அத்தியாயங்களைப் போலவே, இவர்களின் பயணமும் இனிய முடிவைத் தொட்ட ஒரு அழகான உறவாக நிலைத்தது.ஆனால் ,தற்போது ஏற்பட்ட பாக்கியராஜின் பிரிவு,சொல்ல முடியாத வெறுமையையும் அமைதியான வலியையும் மட்டும் மீதம் வைத்துள்ளது.ஒருகாலத்தில் உயிராய் இருந்த அந்த நெருக்கம் இன்று நினைவுகளாக மட்டும் சுவாசிக்கிறது.பேச முடியாத வார்த்தைகள், சொல்லப்படாத உணர்வுகள் எல்லாம் இதயத்தின் ஓரத்தில் மெதுவாக காயமாக உறைந்து கிடக்கின்றன.
