“ராஜா” என்று அழைத்த முதல் மனைவி பிரவீணா.. தொலைந்த “R” மோதிரத்தை மீட்டுக்கொடுத்த 2வது மனைவி பூர்ணிமா…

இந்தியத் திரையுலகில் திரைக்கதை ஜித்தன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கே. பாக்யராஜ், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் ரசிகர்களின் விசிலையும் ஒரே நேரத்தில் வாங்கித் தரும் திரைக்கதைகளை எழுதும் அபூர்வமான கலைஞர். அதனால்தான் அவரை ‘மிடாஸ் டச்’ கொண்ட இயக்குநர் என்று சொல்வார்கள்.

1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோட்டிலுள்ள கோஷா மருத்துவமனையில் பிறந்தார். இரண்டு அண்ணன்களுக்கு அடுத்ததாக பிறந்த கடைசி மகன் . தாத்தாவின் வற்புறுத்தலால் முதல் வகுப்பை இரண்டு முறை படித்தார். பி.யூ.சி. தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலையில், சினிமா கனவோடு சென்னைக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1978-ல் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்ததே அவரது திரையுலகப் பயணத்தின் தொடக்கம். கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு, கவுண்டமணியுடன் ஒரு சிறிய காட்சியிலும் நடித்தார். அதன்பிறகு சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் உணவக பணியாளராக நடித்தார்.

அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவரும் அவர்தான். தொடர்ந்து புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா அவரை வசனகர்த்தாவாக மட்டுமல்ல, கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில், “நான் அனாதை… அப்பா, அம்மா உயிருடன் இல்லை” என்று அவர் பேசும் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது. அந்தப் படம் வெளியாகும் பத்து நாட்களுக்கு முன்பே அவரது தாயார் மறைந்திருந்ததால், அந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் பாக்யராஜ் மிகவும் உணர்ச்சிவசப்படுவார் என்று கூறப்படுகிறது.


இயக்குநராக அவர் அறிமுகமான படம் சுவர் இல்லாத சித்திரங்கள். அதற்கு முன்பே கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தனது முதல் இயக்குநர் படத்தில் சுதாகர், சுமதி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருந்தாலும், பாக்யராஜ் முக்கிய குணச்சித்திர வேடத்தில் தோன்றினார். நகைச்சுவையும் சோகமும் சமமாக கலந்த அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிறகு அவர் தயாரித்து, இயக்கி, நடித்த ஒரு கை ஓசை அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. வாய் பேச முடியாத இளைஞனாக நடித்த அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ,விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள்,தூறல் நின்னு போச்சு,டார்லிங் டார்லிங் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று, பாக்யராஜின் தனித்துவமான திரைக்கதை பாணியை தமிழ் சினிமாவில் உறுதியாக நிலைநிறுத்தின.1982-ல் வெளியான *முந்தானை முடிச்சு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல இடங்களில் வெள்ளி விழா கொண்டாடிய அந்தப் படம் இன்றும் ரசிகர்களால் பேசப்படுகிறது. குறிப்பாக முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் இன்னும் பிரபலமானவை. அதன்பிறகு எங்க சின்னராஜா, இது நம்ம ஆளு போன்ற படங்களும் வெற்றி பெற்று விருதுகளையும் பெற்றன.

பாக்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோகமும் சந்தோஷமும் கலந்த அனுபவங்கள் இருந்தன. அவரது ஆரம்ப கால படங்களில் நடித்த நடிகை பிரவீணாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணமானது. ஆனால் சில ஆண்டுகளிலேயே உடல்நலக்குறைவால் பிரவீணா உயிரிழந்தது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சோகமாக அமைந்தது. பின்னர் நடிகை பூர்ணிமா ஜெயராமை திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமணம் கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நேரில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்ததோடு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் ஆளுமைகளும் ஒன்றாக ஆசீர்வதித்த அரிய திருமணங்களில் இதுவும் ஒன்று.

முதல் மனைவி பிரவீணா அன்பாக “ராஜா” என்று அழைத்து, “R” எழுத்து பொறித்த மோதிரம் ஒன்றை பரிசளித்திருந்தார். அது தொலைந்த பிறகு, அதே வடிவில் அவரது இரண்டாவது மனைவி பூர்ணிமா புதிய மோதிரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.திருமணப் பரிசாக எம்.ஜி.ஆர் இரண்டு குத்துவிளக்குகளை வீட்டிற்கே கொண்டு வந்து வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், மன்ற முரசு இதழ் ஆண்டு விழாவில், பாக்யராஜ்தான் என்னுடைய கலை வாரிசு” என்று எம்.ஜி.ஆர் பொதுவெளியில் அறிவித்தது அன்றைய அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பேசுபொருளானது. *தூறல் நின்னு போச்சு தான் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாக்யராஜ் படம்.டார்லிங் டார்லிங் படத்தில் வில்லனை நீங்களே அடித்திருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக கூறிய சம்பவமும் பிரபலமானது.

அந்தக் காலத்தில் ஏவி.எம். நிறுவனம் தனது நிரந்தர இயக்குநர்களைத் தவிர வேறு யாரிடமும் படம் கொடுக்காத நிலையில், அந்த மரபை உடைத்து முந்தானை முடிச்சு படத்தை பாக்யராஜின் இயக்கத்தில் தயாரித்தது குறிப்பிடத்தக்க விஷயம். மதுரையின் புகழ்பெற்ற தங்கம் திரையரங்கில் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்குப் பிறகு 100 நாட்கள் ஓடிய படமாக தூறல் நின்னு போச்சு சாதனை படைத்தது.

பாக்யராஜின் நெருங்கிய நண்பர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று சாப்பிட்டு, நீண்ட நேரம் மனம் திறந்து பேசுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இறைநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், கோயில்களுக்கு அடிக்கடி செல்ல மாட்டார். ஆனால், தனது திருமண நாளன்று மட்டும் கருமாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை தவறாமல் கடைப்பிடித்து வந்துள்ளார்.

நடிகராக வர வேண்டும் என்று நினைத்த பார்த்திபனை இயக்குநராக மாற்றிய பெருமையும் பாக்யராஜுக்கே சேரும். இயக்குநர், நடிகர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் ஆறு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆராரோ ஆரிரரோ படத்தில் இடம்பெற்ற என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்” பாடல், பாடகி எஸ். ஜானகிக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்ததாம்.

அதற்காக அவர் பரிசாக வழங்கிய பேனாவை, பாக்யராஜ் நீண்ட காலம் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இவ்வாறு, தமிழ் சினிமாவில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தனது தனித்துவமான திரைக்கதை, எளிமையான நடிப்பு, குடும்ப உணர்வுகள் கலந்த நகைச்சுவை மற்றும் ரசிகர்களை கவரும் ‘மிடாஸ் டச்’ மூலம் கே. பாக்யராஜ் அவர்கள் இன்றும் மக்களின் மனதிலும் திரையுலகினர் மத்தியிலும் தனக்கென அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Related News

Latest News