மெரினா மாரத்தான்: முதல்வர் விஜய்க்கு முன்பே… 21 கி.மீ ஓடி நிறைவு செய்த CM..

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் “Start Run, Stop Drugs” என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். முன்னதாக, “விளையாட்டை எடு – Drug-யை விடு” என்ற விழிப்புணர்வு வாசகப் பலகையில் கையெழுத்திட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பின்னர் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடத்தில் இருந்து மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், தானும் அதில் பங்கேற்று ஓட்டத்தில் கலந்துகொண்டார்.

மாரத்தான் கண்ணகி சிலை வரை சென்று மீண்டும் திரும்பி, மொத்தம் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. தீவுத்திடலில் நிறைவடைந்த இந்த நிகழ்வில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் மாரத்தானில் பங்கேற்றது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அளித்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், “இதுவரை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் மாரத்தானில் 3 கிலோமீட்டர் ஓடியதில்லை; தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக ஜோசப் விஜய் பங்கேற்றுள்ளார்” என கூறினார்.

ஆனால் இந்த கருத்துக்கு பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, 2024 அக்டோபர் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் நடைபெற்ற 21 கிலோமீட்டர் அரை மாரத்தானை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 54 வயதான அவர் சுமார் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் ஓட்டத்தை முடித்தார். இதற்கு முன்பும் அவர் 13 கிலோமீட்டர் மாரத்தான்களில் பங்கேற்றுள்ளார் என்பதும் நினைவுகூரப்படுகிறது.

இந்த நிகழ்வு தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related News

Latest News