தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக அறிவித்திருந்த “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான “பேபி வெல்கம் கிட்” வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் ஊட்டச்சத்து பொருட்கள், குழந்தை ஆடைகள், சோப்பு, ஆயில், பவுடர், கொசுவலை, பொம்மைகள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
தவெக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்த நிலையில், இந்த திட்டங்கள் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதன்முறையாக செயல்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்ற குடும்பங்களில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
