300 புதிய அரசு பேருந்துகள் சேவை… முதல்வர் விஜய் செய்த செயல்.. வைரல் வீடியோ….

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பக்கோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஏழு கழகங்களுக்கு இந்த புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

புதிய பேருந்துகள் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி சேவைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், 300 புதிய பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேருந்து சேவையை தொடங்கி வைத்த பிறகு, பெரம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள புதிய 29A பேருந்தில் முதலமைச்சர் நேரடியாக பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பயணம் செய்தனர். பயணத்தின் போது நடத்துநரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்ட முதலமைச்சர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பணியை பாராட்டினார்.

மேலும், ஓட்டுநரின் அருகிலுள்ள முன்பக்க இருக்கையில் அமர்ந்து பயண அனுபவத்தை நேரில் அறிந்துகொண்டார். பேருந்து சென்ற வழியெங்கும் சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள், அரசு பேருந்து ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த 300 புதிய பேருந்துகள் சேவையில் இணைவதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான போக்குவரத்து சேவை கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Related News

Latest News