உலகளவில் முடங்கிய எக்ஸ்… பயனர்கள் அதிர்ச்சி…

உலகின் முன்னணி சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) உலகளவில் திடீர் முடக்கத்தை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணைய சேவை நிலைமை கண்காணிப்பு தளம் டவுன்டிடக்டர் (Downdetector) தரவுகளின்படி, இந்த முடக்கம் நேற்று காலை சுமார் 9 மணியளவில் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் உள்ள பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

அமெரிக்காவில் மட்டும் காலை 9.54 மணியளவில் சுமார் 34,000 பேர் தங்கள் எக்ஸ் கணக்கில் உள்நுழைய முடியவில்லை என புகார் அளித்துள்ளனர். அதேபோல் கனடாவில் சுமார் 3,200 பேரும், பிரிட்டனில் 8,700 பேரும், தென் கொரியாவில் சுமார் 340 பேரும் இதேபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கைகளைத் தவிர, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பயனர்கள் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்துள்ளனர்.

சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து பலர் மற்ற சமூக ஊடக தளங்களில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி இரண்டும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில மணி நேரங்களுக்கு பிறகு மதியம் வாக்கில் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு, சேவை மெதுவாக மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, அண்மைக் காலமாக எக்ஸ் தளம் பல முறை தற்காலிக முடக்கங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

Latest News