தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்கள், இளம் பெண்கள், திருநங்கைகள், இளைஞர்கள் உள்ளிட்ட சுமார் 3,000 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் பொன்சீலன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, வி.வி.டி. சிக்னல் அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமை வகித்தார். இணைச் செயலாளர்கள் கோல்டன், கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அபிஷேக் பொன்சீலன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான ஸ்ரீநாத் கலந்து கொண்டு, கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர் பேசியபோது, “விஜயை நான் ஒரு பொறுப்புள்ள நண்பராக பார்த்திருக்கிறேன். இன்று அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர், இயக்குநர் அல்லது அமைச்சர் என்பதைக் காட்டிலும், விஜயின் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமை அடைகிறேன்” என்றார்.
மேலும், “தளபதியின் தம்பிகளாகிய நீங்கள் அனைவரும் பொறுப்புள்ள இளைஞர்களாக நடந்து கொள்ள வேண்டும். அவரது பிறந்தநாளை அதற்கான உறுதிமொழி நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி போதை இல்லாத மாவட்டமாக உருவாக வேண்டும். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பில் இளைஞர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு மாணவிகளுக்கு கல்வி நிதி, இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் 75 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், விழா ஏற்பாடுகளை அபிஷேக் பொன்சீலன் சிறப்பாக செய்திருந்தார்.
