சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தபால் துறை பல்வேறு முதலீட்டு மற்றும் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக கிராம் சுரக்ஷா யோஜனா திகழ்கிறது.
கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமான கிராம் சுரக்ஷா யோஜனா, பாதுகாப்பான முதலீட்டுடன் நீண்டகால சேமிப்பு மற்றும் காப்பீட்டு பாதுகாப்பை வழங்கும் திட்டமாக கருதப்படுகிறது. 19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் இதில் சேரலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி உள்ளது.
இந்த திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அளவில் சேமித்தால், மாதத்திற்கு சுமார் ரூ.1,500 முதலீடு செய்ய முடியும். திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் காலஅளவைப் பொறுத்து, முதிர்வுக் காலத்தில் ரூ.35 லட்சம் வரை பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிசிதாரர்கள் தங்களது வசதிக்கேற்ப மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தலாம்.
இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, பாலிசி தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதி வழங்கப்படுகிறது. அதேபோல், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேவையெனில் பாலிசியை சரண்டர் செய்யவும் அனுமதி உண்டு. ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பாலிசியை பராமரித்தால் போனஸ் சலுகையும் கிடைக்கும்.
முதலீட்டாளர் 80 வயதை அடையும் போது பாலிசியின் முழுத் தொகையும் வழங்கப்படும். பாதுகாப்பான முதலீடு, ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு, கடன் வசதி மற்றும் நீண்டகால சேமிப்பு பலன்களை ஒருங்கே வழங்குவதால், கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
