மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கமாக இந்தியாவிலும் சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் தற்காலிக சிக்கல்கள் உருவானதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் உணவுத் தொழில்கள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், கள்ளச்சந்தை விற்பனை நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையை கட்டுப்படுத்த மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியதுடன், நுகர்வோருக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. தற்போது நாடு முழுவதும் எல்பிஜி விநியோகம் பெரும்பாலும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்தால், வாடிக்கையாளர்கள் தேசிய வாடிக்கையாளர் சேவை எண் 1915-ல் புகார் அளிக்கலாம். மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் தொடர்பான புகார்களுக்கு 1800-266-6696 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
எரிவாயு நிறுவனங்களின் புகார் மற்றும் முன்பதிவு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இண்டேன் வாடிக்கையாளர்கள் 1800-2333-555 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்; முன்பதிவுக்கு 7718955555 என்ற எண்ணை பயன்படுத்தலாம். பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800-22-4344 மற்றும் 7715012345 ஆகிய எண்களை அணுகலாம். ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்களுக்கான புகார் எண் 1800-2333-555, முன்பதிவு எண் 9493602222 ஆகும்.
இதற்கிடையில், நாட்டில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்ட அனைத்து முக்கிய எரிபொருட்களும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளவோ அல்லது கூடுதல் எரிவாயு சிலிண்டர்களை குவித்து வைக்கவோ தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், LPG மானியத்தை தொடர்ந்து பெற e-KYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து LPG வாடிக்கையாளர்களும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
