தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 29 புதிய எம்.ஆர்.ஐ. (MRI) இயந்திரங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் டெண்டர் கோரியுள்ளது. ஆனால் இந்த கொள்முதல் நடைமுறையில் நிதி முறைகேடு மற்றும் வெளிப்படைத்தன்மை குறைபாடு இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டெண்டர் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த மருத்துவ உபகரண நிபுணர்கள், ஒரு எம்.ஆர்.ஐ. இயந்திரத்திற்கு ரூ.7 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில், மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் CDSCO அங்கீகாரம் பெற்ற 1.5T MRI இயந்திரங்கள் சுமார் ரூ.5 கோடி அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிக விலை கொண்ட வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரங்களை தேர்வு செய்தால், தமிழக அரசுக்கு ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை சேமிப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், இந்த தொகை குறிப்பிடத்தக்க அளவிலான சேமிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், டெண்டர் ஆவணங்களில் விநியோகஸ்தர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், கொள்முதல் செய்யப்படும் MRI இயந்திரங்களின் தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதோடு, மருத்துவ தரவு பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மை தொடர்பான கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான டெண்டர்களில் ‘மேக் இன் இந்தியா’ உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சி.டி. ஸ்கேனர் கொள்முதல் தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது MRI டெண்டர் விவகாரமும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
