மின்சாரத் துறையில் அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை: அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் சோலார் மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், மின்வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அதை ஐந்து மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். சோலார் மின் இணைப்புகளை அதிகரிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றும், அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடன் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

அடுத்த வாரம் மின்சாரத் துறை தொடர்பான விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அந்த அறிக்கையில் மின்சார வாரியத்தின் தற்போதைய நிதிநிலை, ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த விவரங்கள் இடம்பெறும் என கூறினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் காரணம் குறித்து தனக்கு தகவல் இல்லை என்று பதிலளித்தார்.

மின்சாரத் துறையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்புக்காக காத்திருந்தவர்களின் நிலையும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் அதன் கால அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் தொடர்பான முறைகேடு குறித்த விசாரணை மத்திய புலனாய்வு நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றே பொதுமக்களின் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மாநில அரசின் சில கோப்புகளுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாதது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

Related News

Latest News