பயணிகளுக்கு எச்சரிக்கை: புது ரூல்ஸ்!! ரயில்வே அதிரடி அறிவிப்பு…

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தி இந்திய ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தொகை ஜூலை 1ஆம் தேதி முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 13,000 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி 2.50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவிலான பயணிகள் போக்குவரத்தில், சிலர் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தொடர்ந்து காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்தவும், விதிகளை கடுமையாக அமல்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரயில்வே சட்டம் 1989ன் படி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு தற்போது டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த அபராத தொகையை இரட்டிப்பாக உயர்த்தி 500 ரூபாயாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறான பயணங்களை குறைத்து, பயணிகளிடம் ஒழுங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே ரயில்வேயின் நோக்கமாகும்.

இந்த புதிய விதிமுறை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கும் இதற்கான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புதிய அபராத விதி பயணிகளிடையே ஒழுக்கத்தை அதிகரிக்கும் எனவும், ரயில்வே வருவாயை பாதுகாக்கும் எனவும் கருதப்படுகிறது.

Related News

Latest News