ரூ.4,000 அரசு மானியம்… உங்க கிட்ட இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்!”

காவிரி நீர்வரத்து குறைவு மற்றும் மேட்டூர் அணை திறப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தாண்டு குறுவை சாகுபடி குறித்து விவசாயிகள் மத்தியில் கவலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், நெல் சாகுபடியை ஊக்குவித்து விளைச்சல் பாதிக்கப்படாமல் பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு குறுவைத் தொகுப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக, தகுதியான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 வரை மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறுவை பருவத்தில் நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மானியத் தொகையுடன் சேர்த்து தரமான சான்றளிக்கப்பட்ட நெல் விதைகள், இயந்திர நெல் நடவுக்கான ஊக்கத்தொகை, நேரடி விதைப்புக்கான ஆதரவு, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவைகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

மேலும், புதிய நெல் ரக விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமானதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் வழக்கமாக திறக்கப்படும் தேதியில் மேட்டூர் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. கால்வாய் நீரை நம்பியிருந்த விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய ஊக்குவிப்பதற்காக இந்த சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவியை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுகி, நில விவரங்கள், ஆதார் விவரங்கள், பயிர் சாகுபடி தகவல்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். தகுதியான விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறுவை சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.

Related News

Latest News