பான் கார்டு வைத்திருக்கீங்களா? மறந்தும் இதை செய்யாதீங்க!

இந்தியாவில் நிதி தொடர்பான பெரும்பாலான சேவைகளுக்கு பான் கார்டு (PAN Card) முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி தாக்கல் செய்வது, அதிக மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது, முதலீட்டு திட்டங்களில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிதி நடவடிக்கைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது. இதனால், பான் கார்டு விவரங்கள் தவறான நபர்களின் கைகளில் சென்றால், அவை மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

சில நேரங்களில் மோசடிக்காரர்கள், ஒருவரின் பான் கார்டு விவரங்களை பயன்படுத்தி அவர்களுக்குத் தெரியாமலேயே போலி வங்கி கணக்குகள் தொடங்கவோ அல்லது கடன்கள் பெறவோ முயற்சிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் கணக்குகள் மூலம் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான சிக்கல்கள் பின்னர் உண்மையான பான் கார்டு உரிமையாளரையே பாதிக்கக்கூடும்.

உங்களுடைய பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய சிபில் (CIBIL) அறிக்கையை அவ்வப்போது சரிபார்க்கலாம். அதில் உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கடன்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், வருமான வரித்துறையின் Form 26AS மற்றும் Annual Information Statement (AIS) ஆகியவற்றையும் ஆய்வு செய்வதன் மூலம், உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து நிதி நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் மேற்கொள்ளாத முதலீடுகள், தெரியாத கடன்கள் அல்லது சம்பந்தமில்லாத வங்கி பரிவர்த்தனைகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் உடனடியாக விசாரிக்க வேண்டும். வருமான வரித்துறையிலிருந்து எதிர்பாராத நோட்டீஸ்கள் வருவது அல்லது வங்கிகளிடமிருந்து அறிமுகமில்லாத கணக்குகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதும் மோசடியின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க, பான் கார்டு விவரங்களை தெரியாத நபர்களுடன் பகிரக் கூடாது. மேலும், பான் கார்டு நகல்களை அலட்சியமாக கையாளாமல் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பெரிய நிதி மோசடிகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

Related News

Latest News