தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 34,916 நியாயவிலைக் கடைகள் வழியாக 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
ரேஷன் கார்டுகள் உணவுப் பொருட்களை பெறுவதற்கான ஆவணமாக மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் செயல்படுகின்றன. இயற்கை பேரிடர் காலங்களில் வழங்கப்படும் நிவாரண உதவிகள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது.
இதனால் புதிய ரேஷன் கார்டு பெற பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாக புதிய ரேஷன் கார்டுகளை அச்சிடுதல் மற்றும் விநியோகிக்கும் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு கோரி 2 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த சில நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கப்படும் என்றும், தகுதியான அனைவருக்கும் படிப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
