‘செந்தில் பாலாஜி தான் முழு காரணம்!’ – அதிர வைத்த அமைச்சர்!

தமிழகத்தின் மின்சாரத் துறை சந்தித்து வரும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே முழு காரணம் என்று மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மின்துறையில் நடந்ததாகக் கூறப்படும் மெகா ஊழல்களைப் பட்டியலிட்டார்.

குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சோலார் மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்க ஒரு மெகாவாட்டிற்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை புரோக்கர்கள் மூலம் வசூலிக்கப்பட்டதாக அதிரடிப் புகாரை அவர் கிளப்பியுள்ளார். இந்தத் துறையின் உண்மை நிலையை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மிக விரைவில் விரிவான ‘வெள்ளை அறிக்கை’ ஒன்றை அரசு வெளியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்துறையானது நிர்வாக ரீதியாக முற்றிலும் சீரழிக்கப்பட்டு விட்டதாகக் கூறிய அமைச்சர், சுமார் 70 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தபோதும் அவை திட்டமிட்டே நிரப்பப்படவில்லை என்று சாடினார். தமிழகத்தின் மின் உள்கட்டமைப்பு வசதிகள் சுமார் 10 முதல் 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலேயே இன்றும் நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படாததே பல இடங்களில் மின் சுமையைத் தாங்க முடியாமல் மின்வெட்டு ஏற்படக் காரணம் என்று விளக்கமளித்தார்.

முந்தைய ஆட்சியில் முதலீட்டாளர்கள் பல புரோக்கர்களைச் சந்தித்த பிறகே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட அவல நிலை இருந்ததாகவும், இந்த முறைகேடுகளைச் சரிசெய்ய தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது மின்துறையில் டெண்டர் நடைமுறைகள் மற்றும் எஸ்டிமேட் பாலிசிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எவ்வித அரசியல் தலையீடும், கமிஷன் கலாச்சாரமும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் கண்டறியப்பட்ட காரணத்தால் சில மையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, அனைத்து டெண்டர்களும் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இனிவரும் காலங்களில் எந்தவொரு முதலீட்டாளரும் புரோக்கர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அனைத்துச் செயல்முறைகளும் டிஜிட்டல் முறையில் வெளிப்படையாக நடைபெறும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார்.

தமிழக மக்களின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும், மின்துறையை மீட்டெடுத்து சீரான மின்சாரத்தை வழங்கத் தவெக அரசு தீவிரமாக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார். மின்கட்டண விவகாரத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், முறைகேடு செய்தவர்கள் மீதான நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும் என்று எச்சரித்தார்.

அரசின் இந்த ‘வெள்ளை அறிக்கை’ வெளியாகும் போது, கடந்த காலங்களில் மின்துறையில் நடந்த பல பகீர் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதால், தமிழக அரசியலில் இது ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News