தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச விடுதி வசதி.. உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களின் வசதிக்காக, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அரசு விடுதிகளில் தங்கிப் படிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவ, மாணவியரிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உயர்கல்விக்காக வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஏழை எளிய மாணவர்களுக்குத் தங்குமிடம் மற்றும் உணவு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த இலவச விடுதித் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது.

சென்னையைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்காக 12 அரசு கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சேரப் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜமக்காளம் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் அரசின் செலவிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச விடுதி வசதியைப் பெற சில முக்கியமான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரது அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், மாணவர்களின் வசிப்பிடம் அவர்கள் பயிலும் கல்வி நிலையத்திலிருந்து குறைந்தபட்சம் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளைக் கொண்ட மாணவர்கள், இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதிகளின் காப்பாளர்களிடமிருந்தோ அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் வழங்கலாம்.

கல்விக்காகச் சென்னைக்கு வரும் மாணவர்கள் தங்குமிடத்திற்காக அதிகப் பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும், எவ்வித நிதிச் சுமையும் இன்றி தங்களது படிப்பைத் தடையின்றித் தொடரவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். தகுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

Latest News