ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக வெளியான தகவல் உலக நாடுகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் விரைவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் உரத் தேவைகளின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானிடமிருந்து இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அரசு விநியோக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலைகளை உயர்த்தியதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து, பொதுமக்களின் மாதாந்திர செலவுகள் உயர்ந்தன.
போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவிற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், விநியோகம் முழுமையாக சீராக சில மாதங்கள் ஆகலாம். முதற்கட்டமாக வளைகுடா பகுதிகளில் சிக்கியுள்ள சரக்கு கப்பல்கள் இந்தியாவை வந்தடையும். பின்னர் சேதமடைந்த எண்ணெய் உற்பத்தி உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்ட பிறகு நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும்.
இதனால் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலைகள் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், போர் பதற்றம் குறைவதால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன. எனவே இந்தியாவிலும் தங்கம், வெள்ளி விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
