அரசு நிகழ்ச்சிகளில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்ச்சி மே 10-ஆம் தேதி நடைபெற்றதாகவும், அந்நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம் மற்றும் அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபுக்கு முரணானது என அவர் வாதிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல; அது தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கும் முக்கியமான நிகழ்வாகும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு நிகழ்ச்சிகளை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், மாநில பாடலை முதலில் பாடுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, வந்தே மாதரத்தை முதலில் பாட வலியுறுத்தும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதற்கான தெளிவான நிர்வாக உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி மன்மோகன் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related News

Latest News