6 முன்னாள் MLA-க்களுக்குச் செக் வைத்த ‘எடப்பாடி’! தவெக-வில் இணைந்தவர்களுக்கு மெகா ‘சிக்கல்’!

தமிழக அரசியல் களத்தில் கட்சித்தாவல் விவகாரம் தற்போது ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 6 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து அதிரடியாக மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூன்று முறை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இதுவரை சபாநாயகர் தரப்பிலிருந்து எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படாதது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மக்களுக்கும், தங்களை வெற்றி பெறச் செய்த கட்சிக்கும் துரோகம் இழைத்துவிட்டு, ‘குதிரை பேரம்’ மூலம் ஆளுங்கட்சியில் இணைந்தவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

சபாநாயகருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே புகார் மனு மீது சபாநாயகர் சில விளக்கங்களைக் கேட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட 6 எம்எல்ஏ-க்களும் சபாநாயகரிடம் அளித்துள்ள விளக்கங்கள் என்ன என்பது குறித்துத் தங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே, அதற்குரிய பதிலைத் தங்களால் மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவரங்களை வழங்குவதாகச் சபாநாயகர் உறுதி அளித்துள்ள நிலையில், அவை கிடைத்தவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றி கழக அரசு, அதிமுக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதையே முழுநேர வேலையாக வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், இந்த 6 எம்எல்ஏ-க்களின் பதவி நீக்கம் தொடர்பான முடிவு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் பிடியில் இருந்து இந்த 6 பேரும் தப்புவார்களா அல்லது அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா என்பதுதான் இப்போது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சபாநாயகரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News