சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றன.திமுக கூட்டணியின் தயவால்தான் விஜய் அரசு இருப்பதாகவும், இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் எனவும் திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,திமுக இன்னும் தங்களது தோல்விக்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில், தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 25 மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது திமுக வெற்றி பெற்று காட்டட்டும். தைரியம், தில் இருந்தால் எங்களோடு மோதிப் பாருங்கள் என்று கூறியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்தை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் திமுகவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சவால் விட்டு ஆணவமாக பேசியுள்ளார். இந்த பேச்சிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதில், தில் இருந்தால், தைரியம் இருந்தால் 25 மேயர் பதவியில் ஒரு மேயர் பதவியை வெற்றி பெற்று காட்டுங்கள் என ஆணவமாக இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுத்து பேசியுள்ளார். திடீர் பொறுப்பிற்கு வந்த அமைச்சர் தனது பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு, தைரியம் என்றெல்லாம் பேசுவது அநாகரிகமானது.
வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு மேயர் மட்டுமல்ல, அனைத்து மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளையும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வென்று காட்டுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் அரசியலில் இருந்து விலகிவிடுவீர்களா என்று சவால் விட்டு கேள்வி எழுப்பி உள்ளார் .
