காங்கிரசுக்கு எம்பி பதவி ! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்

தமிழகத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஆளும் தவெக தனக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்தது. அந்தக் கூட்டணியில் இருந்தபோதே, குறைந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் பெற்றது.பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறியது.தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியை அமைக்க தேவையான ஆதரவை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடமிருந்து பெற்றது.

இந்த நிலையில், சி.வி. சண்முகத்தின் ராஜினாமாவால் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவை எண்ணிக்கை அடிப்படையில், தவெக ஆதரவு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான சூழலாக பார்க்கப்படுகிறது.எனவே, மாநிலங்களவையில் தனது கணக்கைத் தொடங்க தவெக இந்த வாய்ப்பை பயன்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்தது.இதன் மூலம் கடந்த சில மாதங்களிலேயே இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும், இரண்டு அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் பெற்றுள்ளது. இந்த முடிவுக்கு பின்னால் தவெகவுக்கு முக்கிய திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஒரு முக்கிய சக்தியாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்காக டெல்லி அரசியலில் வலுவான தொடர்புகள் தேவைப்படும் சூழல் உள்ளது. தேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தவெக தலைமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காகவே காங்கிரஸுடன் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் நிலவியதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டதன் மூலம், டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக இதை சிலர் பார்க்கின்றனர்.

2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தில் வலுவான இருப்பை உருவாக்க முடியும் என தவெக கணக்கிடுகிறது. இதனால், தற்போதைய ஒரு மாநிலங்களவை இடத்தை விட்டுக் கொடுத்தாலும், எதிர்கால அரசியல் கணக்கை நோக்கி விஜய் நகர்கிறார் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது

Related News

Latest News