தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த தரமான சம்பவம்

ஒரு சவரன் தங்கம் விலை ஒன்றரே கால் லட்சம் என்கிற அளவில் போய்விட்ட நிலையில்,உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிளோ, விலையை பற்றி கவலைப்படாமல் தங்கம் வாங்கி குவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் புள்ளி விவரத்தை கூறியுள்ளது.பங்கு சந்தையில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று கருதி தங்கத்தில் முதலீடு செய்வது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது ஒருபுறம் எனில், விலைவாசி உயர்வால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்கவும், நாணய மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும் உலக நாடுகள் தங்கத்தை வாங்கி கடந்த ஓராண்டாகவே குவித்து வருகின்றன.

இந்நிலையில் சீன வங்கியும் ஏப்ரல் மாதத்தில் 8 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது 2024-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கொள்முதலாக பார்க்கப்படுகிறது.இதன்மூலம் சீனா தொடர்ந்து 18-வது மாதமாக தங்கம் வாங்கும் போக்கை நீட்டித்துள்ளது. தற்போது சீனாவின் தங்க கையிருப்பு மொத்தம் 2,322 டன்னாக உள்ளது. செக் குடியரசு மத்திய வங்கி ஏப்ரலில் 2 டன் தங்கம் வாங்கியதன் மூலம் தொடர்ந்து 38 மாதங்களாக தங்க கொள்முதல் மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஏப்ரலில் போலந்து மற்றும் சீனா தங்க கொள்முதலில் முன்னிலை வகித்தாலும், மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கியும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. 2014-ம் ஆண்டில் 557 டன்னாக இருந்த ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு, 2026-ல் 880 டன்னைத் தாண்டியிருக்கிறது. அமெரிக்க டாலரின் மீதான சார்பைக் குறைப்பது, உலக பொருளாதார நிச்சயமற்ற நிலை, பணவீக்க அபாயங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பை பலப்படுத்தும் முயற்சிகள் ஆகிய காரணங்களால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதி, விலையை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து குவித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related News

Latest News