மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் உலகம் முழுவதும் பல அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் மக்களுக்கு பெரும் பீதியை அளித்தன.இந்த சூழலில் மத்திய அரசு வழங்கி வரும் சிலிண்டர் மானியம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பெரிய நிவாரணமாக உள்ளது.
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பாக ஏற்கனவே பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. முறையான இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைத்துவிடுகின்றன. ஆனால் இணைப்பு இல்லாதவர்கள், கள்ளச்சந்தையில் விற்பனையாளர்களிடமிருந்து சிலிண்டர்களை வாங்குவது தற்போது மிகவும் கடினமாகிவிட்டது. அப்படியே வாங்கினாலும், அவை வழக்கமான விலையை விட இரண்டு அல்லது நான்கு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. மேலும், எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாகவும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் பலருக்கு எரிவாயு மானியம் கிடைக்காது என்று சமீபத்தில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.ஒரு LPG நுகர்வோர் அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் ஆண்டு வரிக்குட்பட்ட வருமானம் ரூ. 10 லட்சத்தைத் தாண்டினால் அவர்கள் LPG மானியத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.மேலும் ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரே முகவரியில் இரண்டு தனித்தனி இணைப்புகள் ,ஒன்று பெற்றோரின் பெயரிலும், மற்றொன்று வருமானம் ஈட்டும் மகனின் பெயரிலும் இருந்தால், பெற்றோரின் தனிப்பட்ட வருமானம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பெற்றோரின் பெயரிலுள்ள இணைப்பு தொடர்ந்து மானியத்தைப் பெறும்.இந்த விதிமுறை 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சூழலில், தற்போது இது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் புதிய விதிமுறையின்படி, எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் இனி மானியத்தைப் பெறுவதற்கு ‘e-KYC’ செயல்முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கள் எரிவாயு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைக்காது. மேலும், ஜூன் 30-க்குள் e-KYC-ஐ நிறைவு செய்வது அவசியம் என்பதால், e-KYC செயல்முறையை முழுமையாக முடிக்காதவர்களுக்கும் மானியம் கிடைக்காது.
உங்களால் e-KYC-ஐ இணையவழியில் நிறைவு செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு அருகிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் அல்லது எரிவாயு முகமை அலுவலகத்திற்கு நேரில் செல்லவும். அங்கு செல்லும்போது உங்கள் ஆதார் அட்டை, எரிவாயு இணைப்புக்கான பாஸ்புக் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லவும். அங்குள்ள ஊழியர் உங்கள் கைரேகையைப் பதிவு செய்வார். அதன் மூலம் உங்கள் e-KYC செயல்முறை உடனடியாக நிறைவு செய்யப்படும்.
