இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக, கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரான
டி.கே.சிவகுமார் அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். இந்த முக்கியமான பட்டியலில் ஏற்கனவே விஜய் இருக்கும் நிலையில், இவரை முந்திக்கொண்டு தற்போது டி.கே.சிவகுமார் வந்துள்ளார்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக (CLP) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிகே.சிவகுமார்,தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ADR நடத்திய விரிவான ஆய்வின்படி, டி.கே.சிவகுமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் தற்பொழுது தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்து வரலாறு சாதனை படைத்துள்ளனர். ஏடிஆர் (ADR) அறிக்கையின்படி, 1,413 கோடி ரூபாய் சொத்துக்களுடன் கர்நாடகாவின் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.
நாட்டின் பணக்கார முதலமைச்சராக திகழும் டி.கே.சிவகுமாரின் பிரமாணப் பத்திரத் தரவுகளின்படி, அவரின் 1,413 கோடி ரூபாய் ஒட்டுமொத்த சொத்துக்களில், அசையா சொத்துக்களின் (Immovable Property) மதிப்பு மட்டுமே சுமார் 1,140 கோடி ரூபாயாகும். அதே சமயம், அவரிடம் உள்ள அசையும் சொத்துக்களின் (Movable Assets) மதிப்பு 273 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இவற்றுடன் சேர்த்து, அவருக்கு இருக்கும் ஒட்டுமொத்த கடன் பொறுப்புகள் அல்லது நிதியியல் கடன்கள் (Liabilities) 265 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகாரப்பூர்வமாகக் காட்டப்பட்டுள்ளது.
முதல்வர்கள் பட்டியல் என்றால் டி.கே.சிவக்குமார் தான் பணக்காரர், ஆனால் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பார்க்கும் போது, நாட்டின் மிகப்பெரிய பணக்கார பிரதிநிதியாக தமிழ்நாட்டின் அதிமுக (AIADMK) சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் (Leema Rose Martin) விளங்குகிறார். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 5,863 கோடி ரூபாயாகவும், கடன் மதிப்பு 340 கோடி ரூபாயாகவும் உள்ளது.
