தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி – இவர்களில் ஒருவர் பெயரை ‘டிக்’ அடிக்க ரெடியாகும் முதல்வர் விஜய்!

ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (ஜூன் 1) தொட்ங்குகிறது. ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஜூன் 8 என்றும் வாபஸ் பெற ஜூன் 11 கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த கையோடு, தவெகவுக்கு ராஜ்யசபா எம்.பி ஆகும் மெகா வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ராஜ்யசபா எம்.பியாக யாரை டெல்லிக்கு அனுப்பப்போகிறார் விஜய் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது ஒரே ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல். ஒரே ஒரு இடத்திற்குத் தேர்தல் நடக்கும்போது, சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்தக் கூட்டணிக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு (50% மேல்) இருக்கிறதோ, அவர்களது வேட்பாளர் தான் வெற்றி பெற முடியும்.தற்போது தவெக-வுக்கு தனித்து 107 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மேலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் சேர்த்தால் 119 வருகிறது.

இதனால், எதிர்க்கட்சிகளான திமுகவோ அல்லது அதிமுகவோ தங்களது வேட்பாளர்களை நிறுத்தினாலும், தவெக வேட்பாளரை வீழ்த்துவது சாத்தியமில்லை. எனவே, ஜூன் 18-ல் நடக்கவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகள் பெற்றோ புதிய ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.டெல்லியில் தவெக-வின் குரலாக ஒலிக்கப் போவது யார் என்ற ரேஸில் 4 முக்கியப் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.அதில் தவெக-வின் தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், கட்சியின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில் இருந்தவருமான ஜான் ஆரோக்கியசாமியின் பெயர் முதலிடத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் அரசியல் தொடர்புகள் கொண்டவர் என்பதால் டெல்லியைக் கையாள இவர் பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

அடுத்தகாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.இவருக்கு அடுத்து விஜய்யின் நீண்டகால நிழலாகவும் இருக்கும் ஜெகதீஷின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.தவெக காங்கிரஸ் கூட்டணி அமைவதற்குக் திரைமறைவில் மிக முக்கியப் பாலமாகச் செயல்பட்டவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி. இதனால், இந்த ஒரு சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்கி, பிரவீனை வேட்பாளராக்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் தலைமை தவெக-வுக்கு பலத்த அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தனது சொந்தக் கட்சி நிர்வாகியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி டெல்லியில் தவெக-வின் கொடியை நேரடியாகப் பறக்கவிடுவாரா? அல்லது காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு தருவாரா? என்ற கேள்விக்கு சில நாட்களில் விடை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related News

Latest News