அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 13 இரவுகள் தொடர்ச்சியாக நடந்த வான்வழித் தாக்குதல்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் துடித்துக்கொண்டிருந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெறும் 24 மணி நேரத்திற்குள் ஒரு அதிரடி யூ-டர்ன் எடுத்துப் போருக்குத் தற்காலிகமாகப் பிரேக் போட்டது ஏன்? இதுதான் இப்போது உலக நாடுகள் மத்தியிலான ஒரு மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
14-வது இரவுத் தாக்குதலுக்கான முழுமையான வரைபடத்தைப் பென்டகன் தயார் செய்து வைத்திருந்தும், கடைசி நேரத்தில் ட்ரம்ப் அதனைத் தடுத்ததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்க ராணுவத் தலைமையகமான ‘சென்ட்காம்’ (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் அளித்த ரகசிய அறிக்கைதான் இந்த மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு வாரத் தாக்குதல்களில், ஈரானின் தெற்கு கடற்கரை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்கனவே குறிவைக்கப்பட்டிருந்த 80 சதவீதத்திற்கும் அதிகமான ராணுவ இலக்குகள் முழுமையாகத் தகர்க்கப்பட்டுவிட்டன.
இதற்கு மேல் வான்வழித் தாக்குதலைத் தொடர்வது பெரிய அளவில் பலன் தராது என்றும், மீதமுள்ள 20 சதவீத இலக்குகளைத் தாக்க வேண்டுமானால் அது ஒரு முழுமையான நேரடிப் போராக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் ட்ரம்பிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மற்றொரு பக்கம், ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளின் இருப்பு அமெரிக்க ஆயுதக் கிடங்குகளில் மிக வேகமாகத் தீர்ந்து வருவதாக ராணுவத் தளபதி டான் கெய்ன் எச்சரித்துள்ளார்.
ஒருவேளை ஈரான் தனது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவினால், அமெரிக்கப் படைகளையும் அதன் நட்பு நாடுகளையும் பாதுகாக்கப் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை என்ற கசப்பான உண்மையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய ராணுவச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளுக்குச் சற்று அவகாசம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே ட்ரம்ப் இந்தத் தற்காலிக அமைதியைக் கையாண்டு வருகிறார். தற்போது இரு நாடுகளும் “நீ அமைதி காத்தால் நானும் அமைதி காப்பேன்” என்ற ஒரு மெல்லிய நூலிழை போன்ற அமைதி நிலைக்கு வந்துள்ளன.
ஓமன் நாடு தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கவும், கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றவும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்தத் திடீர் பின்வாங்கல் ஒரு உண்மையான அமைதிக்கான தொடக்கமா அல்லது ஒரு மிகப்பெரிய புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியா என்பதை வரும் நாட்கள் தெளிவுபடுத்தும்.
