எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையிலான சந்திப்புக்குப் பிறகு, தேர்தல் தோல்வியால் பிளவுபட்டிருந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைந்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 ஒன்றிய செயலாளர்கள், 3 நகர செயலாளர்கள், 4 பேரூர் செயலாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுகவின் எதிர்கால அரசியல் நிலைமை மற்றும் தனது ஆதரவாளர்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு, மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணையலாமா அல்லது த.வெ.க.வில் சேரலாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள், சி.வி.சண்முகத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்றும், அப்படி நடந்தால் தாங்கள் கட்சியை விட்டு வெளியேறுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படாததால், சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
