தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் பயணமாக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரங்களில் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த முதலமைச்சர் விஜய், இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் பிரதமரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, நீட் தேர்வு விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பிரதமருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொண்டுள்ள இந்த முதல் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
