தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தனது அமைச்சரவையை இன்று அதிரடியாக விரிவாக்கம் செய்துள்ளது. ஏற்கனவே மே 10-ஆம் தேதி முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில், இன்று மேலும் 23 புதிய அமைச்சர்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் பதவியேற்றுக்கொண்டனர். இந்த விரிவாக்கப் பட்டியல் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது, அனுபவம் வாய்ந்த சீனியர்களுக்குப் பதிலாக, இளம் முகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைதான். அமைச்சராக வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த பல மூத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பட்டியல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் நீண்டகால அரசியல் அனுபவத்தை விட, இளம் ரத்தத்தின் துடிப்பு மற்றும் புதிய சிந்தனைகளுக்கு முதலமைச்சர் விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது இந்த நியமனங்களின் மூலம் தெளிவாகிறது. இந்த ஏமாற்றமடைந்த சீனியர்களைத் தலைமை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிர்வாகத்தில் வேகம் இருக்க வேண்டும் என்கிற தலைமையின் விருப்பத்தையே இது காட்டுகிறது.
மறுபுறம், இந்த அமைச்சரவை விரிவாக்கம் காவிரி டெல்டா பகுதி மக்களின் நீண்ட கால ஏகத்திற்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு கடந்த 15 ஆண்டுகளாகவும், கும்பகோணம் தொகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளாகவும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்தது. இந்தப் குறையைத் தீர்க்கும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதியின் ரமேஷ் மற்றும் கும்பகோணம் தொகுதியின் வினோத் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாய வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சர்களின் பட்டியலில் தூத்துக்குடியின் ஸ்ரீநாத், தாம்பரத்தின் சரத்குமார், ராசிபுரத்தின் லோகேஷ் தமிழ்செல்வன், ஆர்.கே. நகரின் மரிய வில்சன் எனப் பல இளம் மற்றும் துடிப்பான தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் முதன்முறையாகத் தேர்தலில் வென்று, தங்களின் நிர்வாகத் திறமையை நிரூபிக்க அமைச்சர் நாற்காலியில் அமருகின்றனர்.
இந்த ‘யங் அண்ட் எனர்ஜிடிக்’ டீம், அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து தமிழகத்தை எப்படி வழிநடத்தப் போகிறது? மூத்த தலைவர்களின் அதிருப்தி கட்சியின் உள்கட்டமைப்பை பாதிக்குமா? அல்லது இந்த மாற்றங்கள் ஒரு புதிய நிர்வாக கலாச்சாரத்தை உருவாக்குமா? தமிழக அரசியலின் இந்த சுவாரஸ்யமான நகர்வுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
