மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரை கொண்ட போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக, தவெக மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதையடுத்து காமராஜ் எம்எல்ஏ காரில் அமர்ந்தபடி கையெழுத்து போடும் வீடியோவை தவெக தரப்பு வெளியிட்டது. இதனால் தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர் “அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என கவர்னரிடம் நேற்று புகார் அளித்து இருந்தேன். அத்துடன், தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்றும் கவர்னரிடம் தெரிவித்தேன்.
ஆனால் காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அசல் கடிதம் எங்கே? காரில் அமர்ந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்? திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். எனது கட்சி எம்எல்ஏ ஆதரவு அளித்திருந்தால் அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்செல்லாதது ஏன்.?
அமமுக எம்எல்ஏ ஆதரவு என்றால், ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டவுடன் அவரையும் கவர்னரை சந்திக்க அழைத்து சென்றிருக்கலாமே.. போலி கடிதத்தை கொடுத்துவிட்டு பின்னால் பேரம் பேசலாம் என்ற திட்டத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். ஆதரவு கடிதம் போர்ஜரி பின்னணியில் இருப்பது விஜய்தான்.
இதுதொடர்பாக நான் கவர்னரிடமும் காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளேன். ஊழலை ஒழிப்பேன் என சொல்லி விட்டு, முதல்-அமைச்சர் ஆவதற்கே ஊழல் செய்பவர் தவெக தலைவர் விஜய். ஆட்சி அமைப்பதற்கே இவ்வளவு மோசடி செய்யும் போது, ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்,” என்று சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து மன்னார்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”108 எம்எல்ஏக்கள் வைத்திருக்கிற விஜய் ஏன் இந்தவாறு முயற்சி செய்கிறார். மெஜாரிட்டி இருந்தால் தான் ஆட்சி அமைக்க வேண்டும். இல்லை என்றால் விட்டுவிட்டு செல்ல வேண்டியதுதானே.. அடுத்த ஆப்சன் என்ன என்று நீங்கள் கவர்னரிடம் கேளுங்கள்.. செய்தியாளர்களால் விஜயை பேட்டி எடுக்க முடியுமா..? உங்கள் அனைவரிடம் கேட்கிறேன் விஜய்யிடம் ஒரு பேட்டி எடுத்து வாருங்கள் .. நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என்று அதிரடியாக பேசியிருக்கிறார்.
