தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு கடிதங்கள் இல்லை என, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஆளுநர் பேட்டி அளித்துள்ளார். அதில், ” இந்த விவகாரத்தில் குதிரை பேரத்தை அனுமதிக்க முடியாது. ஆட்சியமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம் ஆகும். அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க உரிமை கோரி என்னைச் சந்திக்க வருவோரிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.
ஆட்சியமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் உள்ளனரா? என்பது தான் எனது கேள்வி,” என்றார். தொடர்ந்து அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, ”அப்படி வரும் போது அவர்களுக்கான எண்ணிக்கை இருக்கிறதா என்பதைப் பரிசீலனை செய்து முடிவெடுப்பேன். பதவிப்பிரமாணம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால் சூழல் அப்படி இல்லை. 118 என்ற எண்ணிக்கையை இன்று கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன். தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க முடியாது. எனவே பெரும்பான்மையுடன் விஜய் வந்தால் ஆட்சி அமைக்கலாம்,” என்றார். அவரின் இந்த பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஷால் இதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில், ”அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு, தவெக அல்லாத வேறு ஏதேனும் ஒரு தரப்பு, குறிப்பாகக் கற்பனைக்கே எட்டாததும் அதிர்ச்சியூட்டக் கூடியதுமான திமுக-அதிமுக கூட்டணி அதிகாரத்திற்கு வருமானால், ஒரு குடிமகனாகவும் வாக்காளனாகவும் நான் காண்கின்ற விளைவு, சாமானிய மக்கள் மத்தியில் பேரழிவுமிக்கதாகவும் விபரீதமானதாகவும் அமையும். இது எவருக்கும் சற்றும் ஏற்புடையதாக இருக்காது,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
