திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியில் இடம்பெற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ், 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியிருந்தாலும், தனிப்பெரும்பான்மையை எட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
காங்கிரஸின் இந்த முடிவுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை “சகோதரர்” என்று புகழ்ந்த ராகுல் காந்தி, இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே மேடையில் கூட தோன்றவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து விலகும் மனநிலையிலேயே காங்கிரஸ் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பது “பச்சை சந்தர்ப்பவாதம்” என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சூழலில், சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் மக்களவை எம்பியான அகிலேஷ் யாதவ் மறைமுகமாக காங்கிரஸை விமர்சித்துள்ளார். சமீபத்தில் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படத்துடன், ஸ்டாலினுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் பகிர்ந்து, “இக்கட்டான நேரங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
