பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவெக தலைவர் விஜய் திணறி வரும் சூழ்நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் மாயமானதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றினாலும், தவெக தலைமையிலான ஆட்சி இன்னும் அமையவில்லை. அரசியல் களம் பரபரப்பாக இருப்பதால் தவெக தலைமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னைக்கு அருகில் உள்ளமாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்களைத் தவிர்த்து, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 எம்எல்ஏக்களை, மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாகத் தங்கவைத்துள்ளது.
இந்தநிலையில் தவெக கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், திடீரென மாயமானதாக தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் வேகமாக பரவியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தவெக எம்எல்ஏக்களை இழுக்க முயற்சிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் தவெக கட்சி இதை மறுத்துள்ளது.
இதுகுறித்து தவெக தரப்பு, ”எம்எல்ஏக்கள் யாரும் மாயமாகவில்லை. பதவியேற்பு விழா தள்ளிப் போனதால், ஒருசிலர் அனுமதி பெற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.மேலும் சிலர் சொந்த காரணங்களுக்காக வெளியே சென்றுவிட்டு, பின்னர் பனையூர் அலுவலகத்துக்கே வந்துவிட்டனர். அனைத்து எம்எல்ஏக்களும் கட்சித் தலைமையின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பாக உள்ளனர்,” என தெரிவித்து இருக்கிறது.
