இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் இந்திய எரிபொருள் சந்தையை நேரடியாக பாதிக்கின்றன. சமீபத்தில் ஈரான் போர் தீவிரமடைந்து, முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியா பிற நாடுகளிடம் இருந்து அதிக விலைக்கு கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் தாக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வாக பொதுமக்கள் மீது விழுந்தது.
இந்த நிலையை சமாளிக்கவும், வெளிநாட்டு எரிபொருள் சார்பைக் குறைக்கவும் மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக E20 பெட்ரோல் எனப்படும் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், இது செலவைக் குறைப்பதுடன் எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது.
இந்நிலையில், E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் எத்தனால் கலந்த பெட்ரோல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இதனால் காப்பீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெட்ரோலில் கரும்புச் சாற்றை நேரடியாக கலக்குகிறார்கள், எத்தனால் கலந்த பெட்ரோலால் எறும்புகள் மொய்க்கும், வாகன என்ஜின் பழுதடையும் போன்ற தகவல்களும் உண்மையற்றவை என பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. கரும்புச் சாறு, மோலாசஸ் மற்றும் மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களில் இருந்து தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்படும் எத்தனால், தரச் சோதனைகளுக்குப் பிறகே பெட்ரோலில் கலக்கப்படுகிறது.
மேலும், E20 அறிமுகமானதிலிருந்து எத்தனால் காரணமாக என்ஜின் சேதம் ஏற்பட்டதாக பெரிய அளவிலான புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது. எத்தனால் கலப்புத் திட்டம் மூலம் இந்தியா ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமித்துள்ளதுடன், விவசாயிகளின் வருமானம் மற்றும் நாட்டின் எரிசக்தி தன்னிறைவை அதிகரிக்கவும் உதவியுள்ளது.
