அரபிக்கடலின் நுழைவாயிலான ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நடுக்கடலில் பயங்கரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இந்த மோதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் மூன்று பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது, ஈரான் படைகள் அவை மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இருப்பினும், அமெரிக்கக் கப்பல்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும், ஈரானின் தாக்குதல்கள் தவிடு பொடியாக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எனப்படும் ஐஆர்ஜிசி (IRGC), பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை படை ட்ரோன்கள் மூலம் அமெரிக்காவின் மூன்று ‘டிஸ்ட்ராயர்’ (Destroyer) ரகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் நவீன பாதுகாப்பு அமைப்புகள் ஈரானின் ஏவுகணைகளை எளிதாக இடைமறித்து அழித்துள்ளன.
இது குறித்துப் பேசிய ட்ரம்ப், “ஈரானின் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அவை ஒரு பட்டாம்பூச்சி தரையில் விழுவதைப் போல மிக அழகாகக் கடலில் விழுந்தன” என்று வர்ணித்துள்ளார். மேலும், இந்த மோதலில் ஈரானின் பல சிறிய ரகப் படகுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் மோதலுக்குக் காரணமாக ஒரு முக்கியச் சம்பவம் பார்க்கப்படுகிறது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானின் ‘எம்/டி ஹஸ்னா’ (M/T Hasna) என்ற எண்ணெய் கப்பல் அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கக் கடற்படையின் உத்தரவுகளுக்கு அந்தக் கப்பல் அடிபணியாததால், அதன் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன.
இதற்குப் பதிலடியாகவே ஈரான் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்கியுள்ளது. இந்தப் பதற்றம் காரணமாக, ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஈரானின் தற்போதைய தலைமையை “பைத்தியக்காரர்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ள அதிபர் ட்ரம்ப், அவர்கள் அணு ஆயுதங்களைப் பெற அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளார்.
“ஈரான் உடனடியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இல்லையென்றால் இதைவிடக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த ‘எஃகு சுவர்’ (Wall of Steel) போன்ற கடல்வழி முற்றுகை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
