தமிழக அரசியலில் கடந்த சில மணிநேரங்களாக அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள், ஒட்டுமொத்த மாநிலத்தையே உற்று நோக்க வைத்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 7-ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த நடிகர் விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா, தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு, ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட முடியாததே இதற்கு முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், விஜய்யை முதல்வராக்கப் பின்னணியில் நடத்தப்பட்ட ராஜதந்திர நகர்வுகளும், இடையில் புகுந்த ஒரு சிலரின் முடிவுகளும் எப்படிப் பதவியேற்பு விழாவிற்கே ஆப்பு வைத்தது என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆட்சியமைக்கத் தேவையான 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற, தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அதிமுக தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அதிமுக-வின் முக்கியத் தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர், விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு இதில் முழு விருப்பம் இல்லை என்றாலும், பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வின் பக்கம் நின்றதால், சுமார் 32 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் மிக எளிதாக முதல்வராகப் பதவியேற்றிருக்க முடியும். ஆனால், இந்த நேரத்தில் தவெக ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா எடுத்த ஒரு அதிரடி முடிவு, மொத்தத் திட்டத்தையும் தலைகீழாக மாற்றியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸைத் தவெக பக்கம் இழுத்தால், மற்ற கட்சிகளும் வரிசையாக ஆதரவு தரும் என அவர் கொடுத்த ஆலோசனையை விஜய் நம்பினார்.
இதனைத் தொடர்ந்து, வெறும் 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி முந்திக்கொண்டு தவெக-வுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளே வந்த அடுத்த நிமிடம், அதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. “காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்பவில்லை” என்று சி.வி. சண்முகமும், அன்புமணி ராமதாஸும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இதன் காரணமாக, ஆதவ் அர்ஜுனா எதிர்பார்த்தது போல கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை. இதனால் ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் கையொப்பத்தைப் பெற முடியாமல் தவெக தடுமாறி வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில், “தனி மெஜாரிட்டியை நிரூபிக்கும் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்தால் மட்டுமே உங்களை ஆட்சியமைக்க அழைக்க முடியும்” என்று தமிழக ஆளுநர் கறாராகத் தெரிவித்துவிட்டார். இதன் விளைவாக, முதல்வராகப் பதவியேற்கவிருந்த விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையன் சாமர்த்தியமாக அதிமுக தரப்பைக் கொண்டு வந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தேவையில்லாமல் காங்கிரஸை உள்ளே கொண்டு வந்து வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக ஆதவ் அர்ஜுனா மாற்றிவிட்டார் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. இதனால் விஜய்யின் முதல்வர் கனவு தற்போது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
