உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் ஹார்முஸ் நீர்சந்தியில் இப்போது என்ன நடக்கிறது? என்ற கேள்வி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அமெரிக்கா ஒரு பக்கம், ஈரான் ஒரு பக்கம் என போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அதிரடியாக ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இனி ஹார்முஸ் நீர்சந்தி வழியாக எந்தக் கப்பல் செல்ல வேண்டுமானாலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான ஐ.ஆர்.ஜி.சி-யிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதுதான் அந்தப் புதிய விதி.
அதாவது, இனி ஈரானின் ‘பெர்ஷிய வளைகுடா ஆணையம்’ அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள விதிமுறைகளை ஏற்று, அதற்கான முறையான பெர்மிட் வாங்கினால் மட்டுமே அந்தப் பகுதியில் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைத்த கடல் பாதையை முற்றிலுமாக நிராகரித்துள்ள ஈரான், தாங்கள் அறிவித்துள்ள வழித்தடமே பாதுகாப்பானது என்று கூறி, உலக நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லியிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஆபரேஷன் புராஜெக்ட் ஃப்ரீடம்’ என்ற பெயரில் தனது கடற்படையை அந்தப் பகுதிக்கு அனுப்பியிருக்கிறார். தங்கள் நாட்டு வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக இந்த நீர்சந்தி வழியாக அழைத்துச் செல்வதே இந்த மிஷனின் நோக்கம் என்று அமெரிக்கா கூறுகிறது.
ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கை பெயரில் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக டிரம்ப் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கக் கப்பல்கள் எதையும் தாங்கள் அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் வாதங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் ஈரான் அரசு ஊடகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கிளம்பிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தாக்குதல்களை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ‘பைத்தியக்காரத்தனம்’ என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே ஐ.ஆர்.ஜி.சி இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
ஆனால் ஈரானிய ராணுவமோ, அமீரகம் மீது தாங்கள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விரிக்கும் வலையில் அமீரகம் விழுந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் இந்த ஹார்முஸ் நீர்சந்தியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை கொண்டது.
போர் மூளுமா அல்லது ஈரான் விதித்துள்ள இந்த நிபந்தனைகளுக்கு அமெரிக்கா பணியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொடர்ந்து மாறிவரும் இந்தச் சூழலில் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
