அமெரிக்காவையே அலறவிடும் ‘எறும்புகள்’!

அமெரிக்காவை இப்போ ஒரு சின்னஞ்சிறு உயிரினம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் சாதாரண எறும்புகள் இல்லை, சீனாவிலிருந்து பரவிய அதிபயங்கர விஷம் கொண்ட எறும்புகள். ‘ஏசியன் நீடில் ஆன்ட்’ (Asian needle ant) எனப்படும் இந்த வகை எறும்புகள், இப்போது அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மிக வேகமாகப் பரவி வருவதாக ஒரு அதிரடித் தகவல் வெளியாகியிருக்கிறது.

நியூயார்க், புளோரிடா, டெக்சாஸ், ஜார்ஜியா எனப் பல முக்கிய மாகாணங்களில் இந்த எறும்புகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதால், பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எறும்புகள் மற்ற எறும்புகளைப் போலப் புற்று கட்டி வாழ்வதில்லை. மாறாக, காய்ந்த இலைகள், அழுகிய மரக்கட்டைகள் மற்றும் புதர்களுக்கு அடியில் ரகசியமாக ஒளிந்து வாழ்கின்றன. இதனால் மக்கள் தெரியாமல் இதன் மீது கை வைக்கும்போது, இவை மிகக் கொடூரமாகத் தாக்குகின்றன.

இந்த எறும்புகளின் கொடுக்கு எவ்வளவு வலிமையானது என்றால், நீங்கள் அணிந்திருக்கும் துணியையும் துளைத்துக்கொண்டு உங்கள் தோலுக்குள் விஷத்தைச் செலுத்தும் வல்லமை கொண்டது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்த நிபுணர்கள் சொல்லும் தகவல் இன்னும் பயங்கரமானது. “யாரோ ஒருத்தர் ஒரு கூர்மையான ஊசியை எடுத்து உங்கள் தசைக்குள் நேரடியாகக் குத்தினால் எவ்வளவு வலி இருக்குமோ, அதே போன்ற ஒரு வலியை இந்த எறும்பின் கொட்டு ஏற்படுத்தும்” என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த வலி சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்து இருக்குமாம். குறிப்பாக, அலர்ஜி பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த எறும்பின் கொட்டு ‘அனாபிலாக்ஸிஸ்’ (Anaphylaxis) எனப்படும் உயிருக்கே ஆபத்தான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். 90 ஆண்டுகளுக்கு முன்பே இந்த எறும்புகள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது.

இப்போது அமெரிக்காவின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் துறைக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. தோட்ட வேலை செய்பவர்கள் மற்றும் வெளியே செல்பவர்கள் கட்டாயம் கையுறைகளை அணிய வேண்டும் என்றும், இந்த எறும்புகளைக் கண்டால் கவனமாக விலகிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரு நிரந்தரப் பகுதியாகவே இந்த எறும்புகள் மாறிவிட்டதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

Related News

Latest News